Thursday, June 22, 2017

வேகம் விவேகம்

சாலைகளுக்குத் தெரியாது
நீ சாதிக்கப் பிறந்தவன் என்று!

விரைந்து செல்லும்
வாகனங்களுக்குத் தெரியுமா?
நீ தான் எங்கள் வீட்டின்
விடியலென்று......

முந்திச்செல்லும்
முன்னோடிகளுக்குத் தெரியுமா?
நீ தான் எங்கள்
வீட்டின் முகவரி என்று.......

கடந்து செல்லும்
கனரக வாகனங்களுக்குத்
தெரியுமா?
நீ தான் எங்கள்
கண்மணி என்று.,.....

விடியலும்
விலாசமுமாய்
நம்பிக்கையும் எதிர்காலமுமாய்
நம்பியிருக்கிறோம்
உன்னை......

ஐந்து நிமிடங்கள்
காத்திருந்து அடுத்து வரும்
பேருந்திற்காக காத்திருக்க
முடியாத உனக்காக
நீ பிறந்த நாள் முதல்
இன்று வரை காப்பாற்றுவாயென்று
காத்திருக்கிறோம்.....

காலமெல்லாம்
உடனிருப்பேனென்று
கட்டிய தாலி நினைவிருக்கிறதா..
கண்ணாளா?
காத்திருப்பேன் கடைசிவரை

விரல் பிடித்து
நான் நடந்து
கரை தாண்டவும்,
கடல் தாண்டவும் கற்றுக்கொண்ட
உன் நிழல் நான் தந்தையே!
விழித்திருப்பேன்
நீ வரும் வரை...,..

அலுவலகத்திற்குத் தானே
சென்றிருக்கிறாய்;
அப்படியே திரும்பி வருவாயென்று
காத்திருக்கிறோம்

உடையாமலும்
உரசாமலும்
கவனமுடன்
திரும்பி வா!
நீ செல்லும் பாதைகள்
உனக்கு வெறும்
பயணமாக இருக்கலாம் ;
காத்திருக்கும் எங்களுக்குத்தான்
தெரியும் காலனிடம்
போராடிக்
கொண்டிருக்கிறாய்
என்று......

அம்மாவும்,
அப்பாவும்
தம்பியும்,
தங்கையும்
மனைவியும்,
மகளும்
மகனும் என வாழக்கிடைத்த
இந்த வாழ்க்கை
ஒரு வரமென்று
உணர்ந்து கொள்ளுங்கள்!

தொங்கிச் செல்வதும்
துரத்திச் செல்வதும்
உங்கள் குருதியின்
வேகமாக இருக்கலாம்;
ஆனால், விபத்துகளிலிருந்து
எப்போதும் தப்பித்து விடமுடியாது!

Tuesday, June 20, 2017

ஒருமையுடன் நினது திருமலரடி -கந்தகோட்டம்

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவுவேண்டும்


உள்ஒன்று வைத்துப் புறமொன்று
பேசுவார் உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்


பெருநெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்

மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்


மதிவேண்டும் நின் கருணைநிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்

தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் தலம்
ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி
உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே.

-மகான் இராமலிங்க சுவாமிகள்

உரை:
கந்தகோட்டத்தில் குடிகொண்ட முருகா, உனது திருவடியை தினமும் முழுமனதுடன் தியானிக்கின்ற உத்தமர்களின் தொடர்பு கிட்ட வேண்டும். மனதில் ஓர் எண்ணத்தை வைத்துக்கொண்டு வெளியே வேறான்றாகப் பேசுகின்ற பொய்யர்களின் தொடர்பு சேராமை வேண்டும்.பெருமையுடன் உனது கீர்த்தியைப் புகழ்ந்து பேசவேண்டும். பெருமைமிக்க சன்மார்க்க நெறியை கடைப்பிடித்து செல்ல வேண்டும். செருக்கு என்னும் பேய் பிடிக்காதிருக்க வேண்டும். பெண் ஆசையை மறக்கேண்டும். உன்னை என்றும் மறவாதிருக்க வேண்டும். நல்லறிவு வேண்டும். உனது அருள் வேண்டும். பிணியில்லாத ஆரோக்ய வாழ்வு நான் வாழ வேண்டும்.


#கந்தகோட்டம்

Monday, June 19, 2017

முத்தமிட்டேன்...

வாட்ஸ் ஆப்பில் வந்தது
உன் ஸ்மைலி
என் மனமெங்கும்
மழை பெய்ய தொடங்கியது.

ஸ்மைலிக்கு பின்னாலிருக்கும்
புன்னகை பூத்த உதடு
மஞ்சள் சாயம் பூசி
மனதில் நிழலாடியது.

பதிலுக்கு நானுமொரு
ஸ்மைலி போட்டு வைத்தேன்
முகத்தில் இறுக்கத்துடன்

கட்டைவிரல் உயர்த்தி
பதிலை நீ பதிவிட
இறுக்கம் தளர்ந்து
நானும் ஸ்மைலி ஆனேன்

வார்த்தைகளற்ற ஸ்மைலியிலே
வாழ்க்கை நகர்த்தாமல்
வாய்ஸ் குறுந்தகவலை
தட்டிவிட்டேன் ......

பதிலில்லை...

சிலநொடி வெறித்து பார்த்தேன்
கைப்பேசி மௌனத்தில்

....

உங்க வாய்ஸ் நல்லாருக்கு
குறுந்தகவல் கண்ணடிக்க

முத்தமிட்டேன் கைப்பேசிக்கு

- பாலா.....





Friday, June 16, 2017

உணவு என்பது மருந்து

*உணவு* என்பது மருந்து

*ஆடை* என்பது  மானம்

*பணம்* என்பது  தேவை

*ஆங்கிலம்* என்பது மொழி

*தமிழ்* என்பது உயிர்.

*அம்மா* என்பது  பாசம் 

*அப்பா* என்பது ஆசான்

*ஆனந்தம்*  என்பது ஆயுள்

*சினம்* என்பது நோய்

*துன்பம்*  என்பது பரீட்சை

*தோல்வி* என்பது  பாடம்

*வெற்றி* என்பது தற்காலிகம்  

*நட்பு*  என்பது  இளமை

*குடும்பம்* என்பது பற்று

*கர்மா* என்பது தொடரும்

*எண்ணம்* என்பது வாழ்க்கை

*உலகம்*  என்பது மாயை

*நான்*  என்பது அறியாமை

*ஆன்மா  என்பதே நிஜம்*

இதை உணர்ந்து
கொண்டால்

நீ தான் *கடவுள்!*

*படித்ததில்  பிடித்தது*