Thursday, December 24, 2015

தொலைந்து போனவர்கள்

விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
முடிதல் என்பது எதற்குமில்லை

மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.

கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல

குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ
அளித்த தெதுவும் உனதல்ல

உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய்

தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்

ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் – உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் – உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய்

‘நான்’ என்பாய் அது நீயில்லை – வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
‘ஏன்’? என்பாய் இது கேள்வியில்லை – அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு?

– அப்துல் ரகுமான்

Friday, December 18, 2015

பரணில் கிடக்கிறது

பழைய கவிதை நோட்டு 
கண்ணில் பட்டது 
பரணில் சுத்தம் செய்கையில் 

பள்ளி பருவ கிறுக்கல்
திறந்து பார்க்கையில் 
சிரிப்பு வந்தது.

அந்த நோட்டினுள்ளே
காதல் தித்திக்கிறது
சமுதாய சாடல்கள் 
நட்பின் பெருமைகள் 
பெண்ணின் கண்ணீர் 
உழைப்பின் உயர்வுகள் 
அரசியல் அவலங்கள் 

மூடி வைத்தேன் 
கண்ணை மூடி யோசித்தேன் 

அன்றும் இன்றும்
கால ஓட்டத்தின் மாற்றம்

இப்பொழுது நோட்டினுள்ளே
காதல் கசக்கிறது 
சமுதாயத்தில் சாமானியனாய் 
நட்பு வலைதளத்தில் 
உழைப்பில் வெறுப்பு 
அரசியலா ஒதுங்கு 

எல்லோரிடமும் 
எதாவது ஒன்று பரணில் 

ஐயோ நேரமாச்சு 
எனக்கு வேலை இருக்கிறது 
உள்ளுணர்வு அழைக்க 
நோட்டை பரணிலே விட்டு 
சுத்தம் செய்ய தொடங்கினேன்.

- பால முருகன்





Wednesday, December 16, 2015

தென்றல்

பொதிகைமலை விட்டெழுந்து சந்த னத்தின்
      புதுமணத்தில் தோய்ந்து, பூந்தாது வாரி,
நதிதழுவி அருவியின்தோள் உந்தித், தெற்கு
      நன்முத்துக் கடல்அலையின் உச்சி தோறும்
சதிராடி, மூங்கிலிலே பண்எ ழுப்பித்
      தாழையெலாம் மடற்கத்தி சுழற்ற வைத்து,
முதிர்தெங்கின் இளம்பாளை முகம்சு வைத்து,
      முத்துதிர்த்துத் தமிழகத்தின் வீதி நோக்கி.

அந்தியிலே இளமுல்லை சிலிர்க்கச் செந்நெல்
      அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க, என்றன்
சிந்தைஉடல் அணுஒவ்வொன் றும்சி லிர்க்கச்,
      செல்வம்ஒன்று வரும்;அதன்பேர் தென்றற் காற்று!
வெந்தயத்துக் கலயத்தைப் பூனை தள்ளி
      விட்டதென என்மனைவி அறைக்குப் போனாள்.
அந்தியிலே கொல்லையில்நான் தனித்தி ருந்தேன்;
      அங்கிருந்த விசுப்பலகை தனிற்ப டுத்தேன்.

பக்கத்தில் அமர்ந்திருந்து சிரித்துப் பேசிப்
      பழந்தமிழின் சாற்றாலே காதல் சேர்த்து
மிக்கஅவ சரமாகச் சென்ற பெண்ணாள்
      விரைவாக என்னிடத்தில் வருதல் வேண்டும்.
அக்காலம் அறைக்குவந்த பூனையின்மேல்
      அடங்காத கோபமுற்றேன் பிறநே ரத்தில்
பக்காப்பூ னைநூறு, பொருளை யெல்லாம்
      பாழாக்கினாலும்அதில் கவலை கொள்ளேன்.

வாழ்க்கைமலர் சொரிகின்ற இன்பத் தேனை
       மனிதனது தனிமையினால் அடைதல் இல்லை;
சூழ்ந்ததுணை பிரிவதெனில் இரண்டு நெஞ்சும்
       தொல்லையுறு வகைஇருத்தல் வேண்டும் அங்கே
வீழ்ந்துகிடந் திட்டஎனைத் "தனிமை", "அந்தி"
       இவைஇரண்டும் நச்சுலகில் தூக்கித் தள்ளப்
பாழான அவளுடலின் குளிர்ச்சி, மென்மை,
       மணம்இவற்றைப் பருகுவதே நினைவா யிற்று.

தெரியாமல் பின்புறமாய் வந்த பெண்ணாள்.
       சிலிர்த்திடவே எனைநெருங்கிப் படுத்தாள் போலும்.
சரியாத குழல்சரியலானாள் போலும்,
       தடவினாள் போலும், எனைத் தன்க ரத்தால்!
புரியாத இன்பத்தைப் புரிந்தாள் போலும்!
       புரியட்டும் எனஇருந்தேன் எதிரில் ஓர்பெண்
பிரிவுக்கு வருந்தினேன் என்றாள் ஓகோ!
       பேசுமிவள் மனைவி; மற்றொருத்தி தென்றல்!

----பாரதிதாசன்

Tuesday, December 15, 2015

பேசும் மரம்

நம்மைக் கொண்டு எத்தனை
சிலுவைகள் செய்கிறார்கள்..
ஆனால் அவர்களுக்குள் ஒரு
இயேசுவைப் படைக்க முடியவில்லையே

- வாலியின் வரிகள்.

இந்த வரிகள் உணர்த்துகிறது மனிதனின் தேடலில் இருக்கும் உண்மைகளை.

Monday, December 14, 2015

இது போதும் எனக்கு .......

இது போதும் எனக்கு
அதிகாலை ஒலிகள்
ஐந்துமணிப் பறவைகள்
இருட்கதவுதட்டும் சூரியவிரல்
பள்ளியெழுச்சி பாடும்உன்
பாதக்கொலுசு
உன் கண்ணில் விழிக்கும்
என் கண்கள்

இதுபோதும் எனக்கு

தண்ணீர் போலொரு வெந்நீர்
சுகந்தம் பரப்பும் துவாலை
குளிப்பறைக்குள் குற்றாலம்
நான் குளிக்க நனையும் நீ

இதுபோதும் எனக்கு

வெளியே மழை
வேடிக்கை பார்க்க ஜன்னல்
ஒற்றை நாற்காலி
அதில் நீயும் நானும்

இதுபோதும் எனக்கு

குளத்தங்கரை
குளிக்கும் பறவைகள்
சிறகு உலர்த்தத்
தெறிக்கும் துளிகள்
முகம் துடைக்க உன் முந்தானை

இதுபோதும் எனக்கு

நிலா ஒழுகும் இரவு
திசை தொலைத்த காடு
ஒற்றையடிப்பாதை
உன்னோடு பொடிநடை

இதுபோதும் எனக்கு

மரங்கள் நடுங்கும் மார்கழி
ரத்தம் உறையும் குளிர்
உஷ்ணம் யாசிக்கும் உடல்
ஒற்றைப் போர்வை
பரஸ்பர வெப்பம்

இதுபோதும் எனக்கு

நிலாத் தட்டு
நட்சத்திரச் சோறு
கைகழுவக் கடல்
கைதுடைக்க மேகம்

கனவின் விழிப்பில்
கக்கத்தில் நீ

இதுபோதும் எனக்கு

தபோவனக் குடில்
தரைகோதும் மரங்கள்
நொண்டியடிக்கும் தென்றல்
ஆறோடும் ஓசை
வசதிக்கு ஊஞ்சல்
வாசிக்கக் காவியம்
பக்க அடையாளம் வைக்க
உன் கூந்தல் உதிர்க்கும் ஓரிரு பூ

இதுபோதும் எனக்கு

பூப்போன்ற சோறு
பொரிக்காத கீரை
காய்ந்த பழங்கள்
காய்கறிச் சாறு
பரிமாற நீ
பசியாற நாம்

இதுபோதும் எனக்கு

மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
பிரம்பு நாற்காலி
பிரபஞ்ச ஞானம்
நிறைந்த மௌனம்

நீ பாடும் கீதம்

இதுபோதும் எனக்கு

அதிராத சிரிப்பு
அனிச்சப்பேச்சு

உற்சாகப்பார்வை
உயிர்ப் பாராட்டு

நல்ல கவிதைமேல்
விழுந்து வழியும் உன்
ஒரு சொட்டுக் கண்ணீர்

இருந்தால் போதும்
எதுவேண்டும் எனக்கு?

- கவிஞர் வைரமுத்து.

கவிஞரின் இந்த வரிகளை இது போதும் எனக்கும் என்று இல்லாமால் உனக்கும் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன்

Sunday, December 13, 2015

முதல் தீண்டல்



முதல் தீண்டளுக்கு உடல் சிலிர்த்து 
வெட்கத்தில் புன்னைகைத்து
கடற்கரையில் காற்றுவாங்கி
கைபிடித்து பரவசமாய் நடந்து
கன்னத்தில் லேசாய் முத்தமிட்டு
கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி
கண்களால் பேசி சிரித்து
கால்கடுக்க காத்திருந்து
காதுபிடித்து மெல்ல திருக்கி
கண்ணீரோடு கட்டியணைத்து
கண்பொத்தி விளையாடி
இடிக்கு பயந்து தோளில் சாய்ந்து
செல்லமாய் நெஞ்சில் குத்தி
பேசாமல் இருந்து தவிக்க விட்டு
கோவில்சுற்றி, குளம்சுற்றி
மழை ரசித்து நனைகையில்
துப்பட்டாவை குடை விரித்து
புத்தகத்தில் கடிதம் மறைத்து
மணிக்கணக்கில் தொலைபேசி
அப்பாவின் அதட்டலுக்கு அஞ்சி
அவர் ரொம்ப நல்லவர்மா’ என
அழுது புலம்பி அம்மாவிடம் சொல்லி
ஒரு வழியாய் வெற்றி கொள்கிற  
காதல்திருமணங்கள் போல   
இனிப்பதில்லை
இன்டர்நெட்டில் தேடி அலைந்து 
பத்துக்கு பத்து பொருத்தம் பாத்து
பண்ணுகின்ற திருமணங்கள்!

                             - kamal Hassan 
 
                     கமலின் இந்த கவிதையில் இருக்கும் உண்மை அதை அனுபவித்தவர்களுக்குதான் தெரியும்.

புதிய உயிராக்கி

இனி என்னை புதிய உயிராக்கி 
எனக்கேதும் கவலையற செய்து 
மதிதன்னை மிகதெளிய செய்து என்றும்
 மனம் சந்தோசம் கொண்டிருக்க செய்வாய்.

 இந்த வரிகளை படித்த உடன் நமக்கு மீண்டும் புதிதாய் பிறந்த உணர்வு ஏற்படும். இது போல எத்தனையோ கவிதைகளை நாம் படித்தவுடன் நமக்கு ஒரு உணர்வு ஏற்படும். இதை யாருடனாவது பகிர்ந்து கொள்ள தோணும அப்படி எனக்கு பிடித்த கவிதைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நன்றி