Tuesday, December 27, 2016

பாடுபட்டுத் தேடி

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்
பாவிகாள் அந்தப் பணம்      

ஔவையார் அன்றே எழுதிய அற்புதமான நல்வழி.
இன்றும் உணரா ஜென்மங்கள்
உணர்ந்தால் நன்று.

Monday, December 26, 2016

கவிதைக்காரர்கள் வீதி..

கடற்கரைக் காற்றாய்
உன் வீட்டை
நான் சூழ்ந்து நிற்கின்றேன்.
நீ
கொஞ்சம்
ஜன்னலை திற.
நீ
என் பெயரைச் சொல்லிக்
கூப்பிடுகிறாய்
உன் மகன்
ஓடி வருகிறான்
நான்
உன் பெயரைச் சொல்லிக்
கூப்பிடுகிறேன்.
என் மகள்
ஓடி வருகிறாள்.
சேராத காதலெல்லாம்
இப்படித்தான்
பிள்ளைகளாக
வந்து பிறக்கின்றன.
வாசல் கோலமாய்
பரந்து கிடக்கிறது
உன் அழகு
அதன் நடுவில்
பரங்கி பூவாய்ச்
சாய்ந்து கிடக்கிறது
என் மனசு.
பிறகு
தருவதாக சொன்ன
நிறைய முத்தங்கள்
என்னிடம் இருக்கின்றன
"பரவாயில்லை
பிறகு தா " என்று சொன்ன
நிறைய வார்த்தைகள்
உன்னிடம் இருக்கின்றன
பிறகுக்கு பதிலாய்
உடனே என்ற வார்த்தை
வாய்த்தாலொழிய
வசப்பட வாய்ப்பில்லை
முத்தங்கள்.
த.கண்ணன்
(குங்குமம் இதழில்)
google-site-verification: google0a474e8066697960.html

Thursday, December 15, 2016

நாமும் கடவுள்

குழந்தை பேசும்
பாஷை மட்டும்
புரிந்துவிட்டால்
நாமும்
கடவுளாகி விடுவோம்

Monday, December 12, 2016

நான் நானாய் வாழ்வதில்.....!!!!

திரைப்படம் பேசினால்
அரசியல் தெரியாதோ என்பீர்!

அரசியல் பேசினால்
ஆறடி தள்ளி நிற்பீர்!

மொழிப்பற்று கொண்டால்
ஆங்கிலம் புரியாதோ என்பீர்!

ஆங்கிலம் பேசினால்
படித்த திமிர் என்பீர்!

பகுத்தறிவு பேசினால்
கடவுள் பிடிக்காதா என்பீர்!

கடவுள் நம்பிக்கை கொண்டால்
கர்னாடகம் என்பீர்!

சகோதரத்துவம் சொன்னால்
நீங்கள் கம்யூனிஸ்டா என்பீர்!

ஜனநாயகம் பேசினால் நாட்டின்
இறையாண்மைக்கு எதிரானது என்பீர்!

காதல் பிடிக்காதென்றால்
ஆண்மையில் ஐயம் கொள்வீர்!

காமம் பற்றி பேசினால்
காதுகளைப் பொத்திக்கொள்வீர்!

மெய்ஞ்ஞானம் பேசினால்
விஞ்ஞானம் அறியீரோ என்பீர்!

விஞ்ஞானம் பேசினால்
விலகித் தள்ளி நிற்பீர்!

ஓடி ஓடி உழைத்தாலும்
பணத்தாசை பிடித்தவன்!

பொருள் வேண்டாமென்றாலும்
பிழைக்கத் தெரியாதவான்!

எதிர்த்துப் பேசினால்
அதிகப்பிரசங்கி!

பேசாமலிருந்தால்
கல்லுளிமங்கன்!

எத்தனை கடினம் இவ்வுலகில்
நான் நானாய் வாழ்வதில்.....!!!!

-  பத்ம ஸ்ரீ கமலஹாசன்

Sunday, December 11, 2016

தீப ஓளி

மனதின் இ்ருளை
நல்லெண்ணம் எனும்
தீபத்தை ஏற்றி
அகற்றிடுங்கள் இன்று.

Friday, December 9, 2016

இரவு நேரத்து தேவதைகள்

ஆதவன் தீண்டலில்
இமை திறந்தது
எங்கே சென்றிருப்பாள்??
அவள் அங்கு இல்லை
இரவு முழுவதும் இருந்தாளே
எங்கே சென்றிருப்பாள்??
வினாக்களுக்கான விடையும்
அவளிடமே இருந்தது
மடியினில் தூங்க வைப்பவள்
விடிந்தாள் ஏங்க வைக்கிறாள்...

இன்றும் இரவில்
வரக்கூடும்
விடிந்து விட்டாள்
விடை பெறக்கூடும்
இன்று எப்படியாவது
இருக்க வைத்திடனும்
கங்கணம் எனக்குள்

கருமை நிறமென்றாலும்
அமைதியின் உருவமானவள்
மனதின் இறுக்கங்கள்
அவள் பிரவேசித்தால்
இல்லாமல் போகின்றன..

அவள் இருந்தால்
நான் என்கிற அகந்தை
இல்லாமல் போகிறது.

அவள் செல்லுமிடம்
அறிந்திருந்தால்
விடிந்ததும் சென்றிருப்பேன்
அவளை தேடி
அறியாதால் 
அவளுக்காக காத்திருந்தேன்

இரவு வந்தது
அவள் வருவதற்கான 
அடையாளம்
ஆங்காங்கே தென்பட
மின்விளக்குகளுக்கு
ஓய்வு அளித்தேன்

படுக்கையறை விளக்கிற்கும் 
ஒய்வு அளிக்க
ஒளிந்து கிடந்தவளாய்
நொடியில் தாவிக் கொண்டாள்

பேச முயன்ற என்னை
பேச விடாமல்
கண்களை மூடச்செய்தாள்
கண்களை வருடியபடியே
என் மேல் படர்ந்தாள்

உன் பெயரென்ன?
வினவினேன் .
இருள் என பதில் !
பகலில் எங்கு செல்வாய்?
மீண்டும் வினவினேன்.
இங்குதான் இருக்கிறேன்..
பதிலில் அதிர்ந்தேன்.

காண முடிவதில்லையே?
வினாக்களை தொடர்ந்தேன்
விடிந்ததும் வெளிச்சத்தை 
பூசிக் கொள்கிறேன்...
நீ காண முடிவதில்லை..

இப்படியே இருந்துவிட
முடியாதா...???
சலனமின்றி உச்சரித்தன
என் உதடுகள்.

பேசத் தொடங்கினாள்
உன் கண்களில் இருந்து
மறைந்து சென்றால்தான்
நீயென்னை தேடுகிறாய்!
எனக்காக எங்குகிறாய்!
இரவுக்காக காத்திருக்கிறாய்!!!
நானும் உன்னோடு
இருந்துவிட்டால்....
இதையெல்லாம் இழந்திடுவேன்!
நானும் நீயும் 
உறங்கி கொண்டிருந்தால்
உன் லட்சியங்களும்
உன்னோடு உறங்கிவிடும்
வெளிச்சத்தையும் கொஞ்சம்
நேசித்து பார்!
நான் இருப்பதை உணர்வாய்.

விடியல் தொடங்கியது
இமைக்காமல் அவளை பார்தேன்
ஒளியை பூசிக்கொண்டு
விழியிலிருந்து மறைந்தாள்

முதன்முதலாய் 
இருளை மறைத்த
வெளிச்சத்தை நேசித்தேன்
இருளாயி தெரிந்தாள்
வெளிச்சத்தில்!
- பாலமுருகன் 

நண்பர்களே உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்.... நன்றி!


காதல் சிறை

என் கண்களை
உன் துப்பட்டாவில் கட்டி
காதல் சிறையில் அடைத்தாயே

இந்த கைதியை
பார்க்க வருவாயென்று
இரத்தம் தெறிக்க காத்திருந்தேன்

- வாட்ஸ் அப் இல் வாசித்தவை



குழந்தையின் கையில் முட்டை

காதல் என்பது குழந்தையின் கையில் உள்ள முட்டை போன்றது எப்பது உடையும் என யாராலும்
சொல்ல முடியாது.

படித்ததில் பிடித்தது.

Wednesday, December 7, 2016

சமாதான சண்டை

சமாதான கேடயத்தை
கையில் வைத்து கொண்டே
கத்திசண்டை போடுகிறேன்
மனைவியுடன்.

கத்திசண்டை தெரியாத
என் மனைவி
குத்திகாமிக்கும் சண்டையில்
என்னை ஜெயித்துவிடுகிறாள்.

முதலில் கிழிபடுவது
சண்டை தொடங்கியதும்
நான் காண்பிக்கும்
சமாதான கொடி.

மன்னிப்பு அவளின்
சண்டையிடல் அகராதியில்
இல்லாத வார்த்தை.

நீதிபதியாக என் மகள்
சண்டைக்கு இடையில்
சத்தமிட்டு அழுவதே அவளின்
ஆர்டர்! ஆர்டர்!

கைமீறி போகையில்
கைமாறிட
மறைத்து வைத்திருக்கும்
புடவைகளே
சமாதான புறாக்கள்.

அவையும் தோற்றால்
கொஞ்சம் உரசிட
கிரெடிட் கார்டடை சேதாரமின்றி
செய்கூலி சேதாரத்தோடு
மனைவியின் கழுத்தில்
ஆபரணமாக
முடிவுக்கு வரும்
சமதான சண்டை.

- பால முருகன்

உங்கள் கருத்துகளை commentல் பதிவு செய்யவும்.

Tuesday, December 6, 2016

கேபிள் டீவி இல்லாத ஊர்

சில பல வகையாக
இப்படி இருக்கும்
கேபிள் டிவி இல்லாத
ஊர் என்பது
காற்றில்
மெல்லினம் மட்டுமே
பரவி வரும்
பேசப்படுவது
நல்லினம் மட்டுமே
இருக்கும்
தருதலும் பெறுதலும்
முத்தமாக
மட்டுமே இருக்கும்
பகிரப்படுவதாகக்
கவிதைகள் இருக்கும்
கரையான் புற்று
நம்மீது
கூடு வைக்காமல் இருக்கும்
வருகின்ற விருந்தினர்
சாத்தானின் அண்ணாக
இல்லாமல் இருக்கும்
கண்ணோடு கண் நோக்குதல்
விளம்பர இடைவேளையில்
மட்டுமில்லாமல் இருக்கும்
குழந்தைகள்
பார்த்தீனியம்
ஆகாமல் இருக்கும்
உணர்ச்சி உணர்ச்சியாகவே
இருக்கும்
வஞ்சத்தின் நிழல்
இல்லாமால் இருக்கும்.
புணர்ச்சி
புணர்ச்சியாக இருக்கும்
கள்ளத்தின் வலை
இல்லாமல் இருக்கும்
நாமாகவே இருக்கும் வாழ்க்கை
வாய்ப்பதாக இருக்கும்
தொடர் போதையில்
தள்ளாடாத
ஊராகவே இருக்கும்
ஆனால்
நமக்குத்தான் பிடிப்பதில்லையே
ஊராக இருக்கும் ஊரும்
புணர்ச்சியாக இருக்கும் புணர்ச்சியும்
- ஆண்டாள் பிரியதர்சினி, கல்கி இதழில்.
படித்ததும்  பிடித்தது
பகிர்ந்திட துடித்தது
உனக்கும் பிடித்திருந்தால்
உள்(ள)த்தை பகிர்ந்து செல்
இப்பக்கத்தில்...

Monday, December 5, 2016

படித்தால் பிடிக்கும்

படிக்க எனக்கு பிடிக்குமென்பதால்
பிடித்ததை படிக்கும் வழக்கம் எனக்கு இல்லை.படித்ததில் சிலவற்றையாவது பகிர்ந்து கொள்ள எண்ணி பிடித்தது என அடையாள படுத்த நேர்கிறது. ஒவ்வொரு முறை புதிதாக ஒன்றை படிக்கும் போதும் ஒரு குழந்தையை போல 'அ' வில் தொடங்கி  ஔ வில் முடிக்கும் ஆசையுடன் படிக்கிறேன். அதிலும் தமிழில் படிக்கும் தாகம் தணிவதே இல்லை. நாள் தோறும் ஒரு புத்தகமாவது படித்தால் நாம் இளமையாக  உணர்வது என்பது உறுதி. எந்த ஒரு புத்தகமும் ஏதோ ஒரு பக்கத்தில் ஒளிந்திருக்கும் என்னை வெளி கொணர்வதாய் உள்ளது. இன்னும் நிறைய வாசிக்க வேண்டும்.புத்தகத்தின் வாசனையோடு வாழ வேண்டும்.

Offers at Amazon on Accessories

Monday, October 10, 2016

இல்லறம்

கணவன் மனைவியை
புரிந்து கொள்ள முடியாதென்றும்
மனைவி கணவனை
புரிந்து கொள்ள
முடியாதென்றும்
இருவரும் புரிந்து கொண்டு வாழ்வதுதான் இல்லறம்

Saturday, October 8, 2016

காதலில் விழுந்தேன்


காதலில் விழுந்தேன் காயமுற்றேன்
மீண்டு வந்தேன் 
மீண்டும் விழுந்தேன் கவலையுற்றேன்.
தோல்வி இங்கு மாறவில்லை
தோற்கடிப்பவர்கள் மாறினார்கள்

தோல்வி தந்த காதலிகளே
சிறிதும் சினமில்லை உங்களோடு
காதலை சொல்ல எனக்குரிமையெனில்
காதலை மறுக்கும் உரிமையுனக்கு

காதல் இருவருக்கும் பொது
ஒருதலை காதலை இருதலையாக்க
புரிதலில்லாத காதலோடு
மறுதலையை காவுகேட்கும் காதலா!
இதற்க்கு பெயர்தான் காதலா!!!

காதலை புரிந்துகொள்
காதலியை காதலிக்குமுன்
காதலை காதல் செய்
காதல் தோற்கடிப்பதில்லை....

-பால முருகன்


Tuesday, October 4, 2016

வாட்ஸ் அப் ல் வந்தவை

  எப்பொழுதும் திரையரங்குகள் மீது எனக்கு இனம் புரியா மரியாதை
உண்டு...!! எளியவர்களை முன் இருக்கைகளில் அமர வைத்து அழகு பார்க்கும் ஒரே இடம்...

வாட்ஸ் அப் ல் வந்தவை

Friday, September 30, 2016

கோபம் - அண்ணாவின் கவிதை


குப்பத்துச் சுப்பனுக்குக் கொள்ளைக் கோபம்,
குடித்திட்ட கூழதுவும் வேகவில்லை.
கடித்திட வெங்காயம் தானு மில்லை.
கேட்டதற்குக் குப்பி தந்த பதிலிலே
உப்பில்லை, சப்பில்லை, ஒப்ப வில்லை
மாடாக நான் உழைத்து வீடு தேடி
மண்தின்னத் தான்வர வேண்டு மோடி!
வரவர உன்புத்தியுமே பாழாய்ப் போச்சி.
வாயினிலே வந்ததென்ன புத்து தானோ!
வெண்ணெய் உருக்கினது
வேலைவெப்பம் தீர்த்துவிடும்.
இன்னும் இரண்டு கரண்டி
போட்டுச் சாப்பிடுவீர்!
இன்மொழி இதனைக் கேட்டு
எரிச்சல் மிகவும் கொண்டு,
என்ருசியை நானறிய
இருக்கு தெனக்குப் புத்தி கொஞ்சம்.
எனக்கோபம் காட்டுகிறார்
எல்லம் மாவின் கணவர்.
கற்றிவந்த அலுப்பதனால்
சூடாகப் பேசுகிறார்.
குப்பத்து ஆண்களுந்தான்
தப்பேதும் செய்தனரோ?
எப்பாடு படுகின்றார்
இராப்பகலாய்ப் பாவம்,
எல்லாம் நம்குடும்பம்
ஏற்றம் பெறுவதற்கே.

உருசி எதிலே இவர்க்கு என்று
கண்டறிய வேண்டுமினி.
இஞ்சி பச்சடியோ? எலுமிச்சம் பழச்சாறோ?
உருளை வருவலோ? கருணை கூட்டதுவோ?
மோர்குழம்பும், வடையும்
மொச்சை மசியலுமோ?
வெண்டையோ? முருங்கையோ!
பிஞ்சுக் கத்திரியோ?
ஏதவர்க்கு ருசிதருமோ?
இனிநாம் கண்டறிவோம்
எல்லம்மாள் இந்தவிதம்
எண்ணமிட்டாள்.

அவர் 'ருசி'யை அவள்
அறிய முடியுந்தானோ?!
கருத்த மேனியது,
உழைப்பால் மெருகேறி,
கந்த லாடையது இளமைக் குறிகாட்ட,
மடுவில் குறித்தவளும்,
மானாக ஓடுகிறாள்.
மார்பைத் துளைத்திடுது
மாபாவம் தரும்எண்ணம்.

எப்படியேனும் இவளைக்
கைப்பிடித்தாக வேண்டும்,
ஆசைநோய் வளரு மானால்,
ஆள்உருகிச் சாவாராம்.
ஆகையினால் உயிர்ப்பிச்சை
அவளாலே பெறவேண்டும்.
எத்தனையோ பெரிய
இந்த உலகமதில்
என்போல்வார் இல்லையோ?
எவ்வளவோபேர், வல்லோர்.
இந்தவிதமாக எண்ணமிட்ட
கண்ணப்பர்.

ஆனமட்டும் பார்த்திடுவேன்
மாந்தோப்பு வேலையைநான்
ஆள்கூட்டிக் கொண்டுபோய்
அறுவடை தனைக்கவனி,
மாடுகண்ணு கார்த்திடட்டும்,
மாரியா? பெயரென்ன? குப்பி!

ஏற்பாடு இதுஎன்று கண்டானா
சுப்பனவன், காற்றனான்.
சுள்ளிகளைப் பெறுக்கிச்
சொகுசாகக் கட்டாக்கி,
வாலைப் பருவத்தால் வந்திடும் குலுக்குடனே
குப்பிநடை நடந்தாள் வீடு போக.
ஓகோகோ! நடப்பதிது
எத்தனை நாட்களாக?
உனக்காகத் தானோ
மாந்தோப்பும் அதில்உளதும்!
கண்ணப்பர் கேட்கின்றார்,
கடுங்கோபம், கண்ணில் இல்லை!
போ! போ! அக்குடிசையிலே
போட்டுவிடு சுள்ளிகளை என்றார்.
இப்படி ஆகுமென்று அறிந்திருந்தால்
கனிந்து குனிந்து சுள்ளி
குவித்திருக்க மாட்டேனே.
செல்வம் குவித்திருக்கும்
சீமான் இவருக்கு,
என்னகுறை வந்துவிடும்.
இந்தச்சுமை போனால்!
சுள்ளியுடன் கவலையையும்
சுமந்துசென்று குப்பி
குடிசையிலே போட்டுவிட்டு,
குறைமனதாய்த் திரும்புகையில்,
பச்சைச் சிரிப்புடனே, ஆங்கு
நிற்கின்றார் கண்ணப்பர்.
வந்தது மோசமென்று
வண்டாடு விழியாள்
கண்டு கொண்டாள், கடுங்
கோபம் அவளுக்கு.
கால் தட்டிவிடலாமா காட்டுக்
கூச்ச லிடலாமா.
கட்டையால் தாக்குவதா?
கல்வீசிக் கொல்லுவதா?
என்ன செய்திப்போது இம்சையைத்
தடுப்பது நான், என்று ஏதேதோ எண்ணுகிறாள் குப்பி,
கதிரவனோ மறைகின்றான்.
ஊருக்குப் பெரியவராம்
உண்மை நீதி அறிந்தவராம்.
ஏருக்கு மாடாக உழைக்கும்
ஏழைக்குக் கூற்றாவார்.
பெண்பித்துக் கொண்டலையும்
பேயனெனத் தெரிந்திருந்தால்,
பொன்விறகு கிடைத்தாலும்
புகுவேனோ மாந்தோப்பு!
பாம்பு சீறுமுன் பசுப்புல்
வெளியதுவும் பாங்குதான், அதுபோல
பாவி இப்பார்வை காட்டு முன்னே
என்தந்தைபோல் தெரிந்தார்.

குப்பியைத் தொட்டிட
அவர்நெருங்கு கிறார்
தப்பிவிடுவது எனஅவள்
தாவுகிறாள்.
ஒருபிடி! ஒருதள்ளு! அடப்பாவி!
குப்பி! குப்பி! இவ்வளவே!!
பாய்ந்தோடு கின்றார் பதைத்து.
சாய்ந்து கிடக்கிறார் சீமான்.
இது நடந்து ஆயின நாட்கள்
இரண்டு.

மூச்சு விடவில்லை குப்பி, பயம்
மூளையைக் குழப்பியது.
கண்ணப்பர் ஊரில்இல்லை
கழுகுமலை சென்றிருந்தார்.
சொன்னால் கணவன் நம்புவானோ?
சொகுசு உனக்கேன் என்பானோ?
எட்டி அரிவாள் அவன் தலையை
எடுத்து வருகிறேன் என்பானோ?
எத்தனை விபத்து வந்திடுமோ?
என்றஞ்சி வாயும் திறக்கவில்லை.
இந்நிலையில் கூழுந்தான் வேகுமா?
கொடுத்திட வெங்காயமும் கிடைக்குமா?
கோபம் கொதித்தது குப்பிக்கு!
யார்மீ ததனைக் காட்டிடுவான்?
சூதுசெய்தவன் மாளிகையில்,
இவளிருப்பதோ குப்பத்தில்!

பெத்தவன் மீதே குப்பி
மெத்தவும் கோபம் கொண்டாள்.
எத்தனை சொல்லியும் கேட்கவில்லை
இந்நிலைக் கவனே காரணமாம்!
ஊழியம் செய்திங்குப் பிழைப்பதிலே
உண்டோர் ஆயிரம் கேடப்பா!

உதவிடு பணம்ஒரு முன்னூறு
வாங்குகிறேன் பசு பசிபோக்க,
பாலும்மோரும் விற்றிடுவோம்.
பாவியிடம் போய்ப்பணி புரியோம்.
அந்தப் பணம் அவர்தந் திருந்தால்
இந்தக் கதியும் வந்திடுமா?
இந்தக் போபம் குப்பிக்கு!
இனமறியாக் போபம் சுப்பனுக்கு.
பறிக்கச் சென்றவர் முன்கண்டார்;
பதறிச் சீறினார் கண்ணப்பர்.

ஒரேவெட்டு! வீழ்ந்துவிட்டான்
என்றே கூறி
ஓடோடி வீடு நுழைந்தான்
சுப்பன் அறிவா ளோடு!
அய்யய்யோ! யாரைநீ
கொன்று போட்டாய்?
காம வெறிப்பேய்
கண்ணப் பனையா?
பதறிக் கேட்டிடும் குப்பிக்குச்
சுப்பன் கூறிடுவான் பதிலும்.

கண்ணப்பர் தங்கக் கம்பி.
தாக்க வந்தான் சொக்கனுமே
கடனாம், வழக்காம், ஏதேதோ
கோபம்வெறி அவனுக்கு.
பக்க மிருந்தேன் குப்பி!நான்
பாவியைத் தீர்த்துப் போட்டு விட்டேன்.
எதைஎண்ணி அழுவாள் குப்பியுமே
எத்தனை தாங்கும் அவள் மனமும்?
கொலையாச்சே, போலீஸ்? என்றாள்.
தொலைதூரம் ஓடிப்போவேன் என்றான்.
ஆறு ஆண்டுகள் கடுங்காவல்
அளித்தார் நீதி மன்றத்தார்.

சிறையில் சென்று பார்த்திடுவாள்;
சித்தம் உருகி அழுதிடுவாள்,
சந்தியசந்தர் எஜமானர்
காப்பா ரென்றவன் தேற்றிடுவான்.
மாந்தோப்பில் முன்போல்
வேலை செய்தால்.
மகராசன் வார்த்திடுவான்
கஞ்சி என்றான்.

எப்படி அவள் உண்மை செப்பிடுவாள்?
ஒப்பிடுமா அங்கு வேலை செய்ய.
ஆலையில் கூலி கிடைத்திடுமாம்
ஆறுமுகம் சொன்னார் சேருகிறேன்.
எனக்கூறினாள் குப்பி, சென்னை
வந்து விட்டாள்.
கோபம் மிகக்கொண்டான் சுப்பனுமே!
சோரம் போனாள் குப்பி என்றெண்ணி.
கோபம் அவரவர்
கொள்கின்றார்,
யாரவர்க்குண்மை
கூறுகின்றார்!

Tuesday, September 27, 2016

கணவனான காதலன்

தொலைந்து போன காதலனை    
தேடுகிறேன் கணவனிடம்
காதலியை தொலைத்து என்னில்
மனைவியை தேடும் அவன்
மன்னிக்க வேண்டும்
அவரென்று அழைக்க உத்தரவு.

முதல் ரசிகையாம் 
உன் கவிதைகளுக்கு
காதலிக்கும் போது
இன்றோ முகவரியாம்
உன் கவலைகளுக்கு
கல்யாணத்திற்கு பிறகு
எப்படி சிந்திக்கலானாய் நீ !!!

உன் அம்மாவிற்க்கு மருமகளானேன் 
உன் மகளிற்க்கு அம்மாவானேன்
உனக்கு மட்டும் மனைவியானலும் 
காதலியாய் தொடர விழைகின்றேனே
உனக்கு புரிகிறதா??

காதலுக்கு இருவரும் பொது
கல்யாணத்திறக்கு பிறகு
கணவன் மட்டும் உயர்வெனும்
அடிமை விலங்கு உடைக்கும்
முற்போக்கு காதலனாய் வருவாயா...

 
கணவெனும் முகமூடியிட்டிருக்கும்
காதலனே மீண்டு வா
மனைவியெனும் மாயவலையிலிருந்து
காதலியை மீட்டு போ....

 ------பால முருகன் !!!!!!

Wednesday, September 21, 2016

கருவறை வாசனை


அன்புள்ள அம்மா ,

கடவுளின் மடியில்
விளையாடிக் கொண்டிருந்தேன்.
கோவிலைக் காண்பிப்பதாகச் சொல்லி ,
என்னை ,
உன் கருவறைக்குள் பிரவேசிக்கச் செய்தார் , கடவுள் !

இருட்டாக இருந்தாலும் ,
இதமாக இருந்தது இந்தப் புதிய இடம்..
முதலில் பயமாக இருந்தாலும் ,
பிறகு சந்தோஷமாக வளரத் தொடங்கினேன் !

நீ சிரிக்கும் பொழுது ,
நானும் சிரித்தேன்..
நீ அழும் பொழுது ,
நானும் கண்ணீரில் ...

பிறகு தான் புரிந்தது
நம்மிடையே ஒரு புது உறவு மலர்ந்தது என்று ...
ஆமாம்
நீ என் அம்மா !

"அம்மாவும் நான் தான் "
- கடவுள் சொல்லி இருக்கிறார் !
இன்னொரு கடவுள் அம்மாவா - இல்லை
அம்மா இன்னொரு கடவுளா ?
தெரியவில்லை ...
இப்படி பல விஷயங்களை
யோசித்துக்கொண்டே வளர்ந்தேன் !

உன்னை பார்க்க வேண்டும் போல் இருந்தது ,
ஏனென்றால் நீ கடவுளின் சாயல் !

அப்பொழுது தான்
ஒரு தீராத வலி என்னை ஆட்கொண்டது ,
ஒரு அரக்கன் என் உடலசைவுகளைச் செயலிழக்கச் செய்தான் ...
ஓரிரு நிமிடங்களில் என் போராட்டம் தோல்வியில் முடிந்தது ।

நான் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் இழந்தேன் ॥

உன்னை பார்க்கமலே
உன்னை பிரிகிறேன்...
எனக்கு பிடித்தமான அந்தக் கோவிலை விட்டும்...

உன்னோடு விளையாட ஆசைப்பட்டேன்
என் பிறப்பே விளையாட்டாகப் போய்விட்டது
அந்த வெளிச்சத்து வாசிகளுக்கு ...

மீண்டும் அதே கடவுளின் மடியில் ..
அதே விளையாட்டுக்கள் தான் ...
புதியதாக இன்னொரு ஆசையும்..
மீண்டும்அதே இருட்டறையில் ,
உன் அன்பு மகளாக உலா வர வேண்டும் ...
மீண்டும் நுகர வேண்டும் ,
உன் கருவறை வாசனையை ...

இப்படிக்கு ,
பிறவாத உங்கள்
குட்டிப்பாப்பா :)

     - கனிமொழி

நீயொரு கவிதை புத்தகம்

எனது மகளுக்கான எனது கவிதை

நீயொரு கவிதை புத்தகம்











உன்னை வாசித்து முடிக்க
ஒரு கோடி ஜென்மம் வேண்டும்!
எந்த வரியிலிருந்து தொடங்கினாலும்
உற்சாகமாய் படிக்கலாம்!
அள்ள அள்ள குறையாத
அமுதசுரபி நீ !
எழுத்து பிழையொன்றும்
உன்னில் தென்படவில்லை!
உன்னை படிப்பதற்கென்று
என்ன தவம் செய்தேனோ!
உன்னை படித்த பிறகாவாது
எந்தன் பேனா முனை
ஒரு கவிதை எழுதட்டும்.!

 --- -- ---- --- பால முருகன் ----

உன்னுடன் பேசாமலிருக்கும் போது

உன்னுடன் பேசாமலிருக்கும் போது
உன்னை பற்றியே பேசுகிறேன்
நீயில்லாத பயணத்தில்...
உன் நினைவுகள் பயணிக்கிறது
உன்னை கோபித்து கொண்டதற்காக
என்னை கோபித்து கொள்கிறேன்.
தூரமாய் செல்ல செல்ல
உனது அருகாமையை விரும்புகிறேன்.
காத்திருகிறேன் நான்
உன் மடியில் தலைசாய்க்கும்
தினத்திற்காக தினம்தினம்.

 - பால முருகன்

சம நோக்கு கவிதை

காக்கை குருவியைப்போல்
கவலையின்றி நீயிருந்தால்
யாக்கை கொடுத்தவனை
யார்நினைப்பார் இவ்வுலகில்
சட்டியிலே வேகின்ற
சத்தெல்லாம் சரக்கானால்
மட்டின்றிப் படித்துவந்த
மருத்துவர்க்கு வேலையென்ன
கடலருகே வீற்றிருந்தும்
கடுந்தாகம் வரும்பொழுதே
கடவுளெனும் ஒருவனது
கைசரக்கு நினைவுவரும்
இன்னதுதான் இப்படித்தான்
என்பதெல்லாம் பொய்க்கணக்கு
இறைவனிடம் உள்ளதடா
எப்போதும் உன்வழக்கு
எல்லாம் அவன்செயலே
என்பதற்கு என்ன பொருள்
உன்னால் முடிந்ததெல்லாம்
ஓரளவே என்று பொருள்.  
- கண்ணதாசன்கவிதை வரிகள்

Saturday, February 13, 2016

காதல் யாவருக்கும் பொது.

எனக்கு காதல் வருமென்று
என் தந்தை அறிந்திருக்கவில்லை
என்னை காதலிக்கவைத்த
என் மனைவி அறிந்திருக்ககூடும்
எனவேதான் விழுந்தேன்
அவள் வலையில்...

நதியின் பயணாமாய்
நம்மை அழைத்து சென்று
அருவியாய் ஆர்பாட்டமாய்
நம்மை விழ செய்யும்
காதல் தவிர்க்கமுடியாது.
காதலர் தின வாழ்த்துக்கள்....
  --- பாலா-----

Monday, January 25, 2016

தொலைத்தது யார்

ஏதோ தொலைந்து போன
உணர்வு நெஞ்சுக்குள்ளே
கதவை திறக்கிறேன்
இங்கும் அங்குமாய்
மனித நடமாட்டம்
தொலைந்து போனதை
அவர்களில் தேடுகிறேன்
கதவடைத்துவிட்டு
அறைக்குள் வருகிறேன்
கண்ணாடியை பார்க்கிறேன்
என் முகம் மட்டும்
என்னோடிருந்த முகங்கள்
நினைவில் வர
பின்புதான் தெரிகிறது
தொலைத்தவன் அல்ல நான்
உங்களிடமிருந்து
தொலைந்து போனவன் நான்....

Monday, January 11, 2016

இல்லாதிருத்தல்

சமையிட்ட கண்கள் - தங்கத்தில் கொம்புகள்
இனம் வியக்கும் வேகம் - முதுகில் நாகம்
இப்படி ஒரு எருமைதான் கடவுள்
எருமைகள் நினைக்கலாம்

ஆறடி நீளம்
அழகான பொந்து
அரிசிகளால் அரியனை
ராட்சஸ விரல் -  அதில்
செறுப்புகள் அறுக்கும் சக்கரம்
இப்படி ஓர் எறும்புதான் எம்பெருமான்
எறும்புகள் நினைக்கலாம்

ஓளி வீசும் ஆயிரம் வண்ணங்களில்
உடலும் சிறகுகளும்
எட்டு நாட்களுக்கொருமுறை உயிர்த்தெழுதல்
அந்தரத்தில் சுழலும் விஸ்பரூப மலரில் வீற்றிருப்பு
இப்படி ஓரு பட்டாம்பூச்சிதான் பரம்பொருள்
பட்டாம்பூச்சிகள் நம்பலாம்

சிறகுகள் முளைத்த ஓடு
மகுடம் சூட்டிய மொட்டைதலை
நாளொன்றிற்கு 24 முறை எட்டுவைத்து
காலத்தை நிர்ணயித்தல்
இப்படி ஓர் ஆமைதான் ஆண்டவன்
ஆமைகள் தீர்மானித்திருக்காலம்

கனிகளே இலைகளாய் ராஐ மரம்
பூக்கள் பதித்து மேகத்தாலான வெள்ளைக் கூடு
கழுத்தில் வடைமாலையோடு
அபயக்கரம் காட்டி திருச்சிற்றம்பலம்
இப்படி ஒரு காக்கைதான் காக்கும் தெய்வம்
காக்கைகள் வாதாடலாம்

எந்தவோர் இனத்தின் கற்பனா சக்தியும்
கடவுளை பூமியில் அனுமதிப்பதில்லை.

------கபிலன் வைரமுத்துவின் படைப்பு குங்குமம் இதழில்.....