ஆதவன் தீண்டலில்
இமை திறந்தது
எங்கே சென்றிருப்பாள்??
அவள் அங்கு இல்லை
இரவு முழுவதும் இருந்தாளே
எங்கே சென்றிருப்பாள்??
வினாக்களுக்கான விடையும்
அவளிடமே இருந்தது
மடியினில் தூங்க வைப்பவள்
விடிந்தாள் ஏங்க வைக்கிறாள்...
இன்றும் இரவில்
வரக்கூடும்
விடிந்து விட்டாள்
விடை பெறக்கூடும்
இன்று எப்படியாவது
இருக்க வைத்திடனும்
கங்கணம் எனக்குள்
கருமை நிறமென்றாலும்
அமைதியின் உருவமானவள்
மனதின் இறுக்கங்கள்
அவள் பிரவேசித்தால்
இல்லாமல் போகின்றன..
அவள் இருந்தால்
நான் என்கிற அகந்தை
இல்லாமல் போகிறது.
அவள் செல்லுமிடம்
அறிந்திருந்தால்
விடிந்ததும் சென்றிருப்பேன்
அவளை தேடி
அறியாதால்
அவளுக்காக காத்திருந்தேன்
இரவு வந்தது
அவள் வருவதற்கான
அடையாளம்
ஆங்காங்கே தென்பட
மின்விளக்குகளுக்கு
ஓய்வு அளித்தேன்
படுக்கையறை விளக்கிற்கும்
ஒய்வு அளிக்க
ஒளிந்து கிடந்தவளாய்
நொடியில் தாவிக் கொண்டாள்
பேச முயன்ற என்னை
பேச விடாமல்
கண்களை மூடச்செய்தாள்
கண்களை வருடியபடியே
என் மேல் படர்ந்தாள்
உன் பெயரென்ன?
வினவினேன் .
இருள் என பதில் !
பகலில் எங்கு செல்வாய்?
மீண்டும் வினவினேன்.
இங்குதான் இருக்கிறேன்..
பதிலில் அதிர்ந்தேன்.
காண முடிவதில்லையே?
வினாக்களை தொடர்ந்தேன்
விடிந்ததும் வெளிச்சத்தை
பூசிக் கொள்கிறேன்...
நீ காண முடிவதில்லை..
இப்படியே இருந்துவிட
முடியாதா...???
சலனமின்றி உச்சரித்தன
என் உதடுகள்.
பேசத் தொடங்கினாள்
உன் கண்களில் இருந்து
மறைந்து சென்றால்தான்
நீயென்னை தேடுகிறாய்!
எனக்காக எங்குகிறாய்!
இரவுக்காக காத்திருக்கிறாய்!!!
நானும் உன்னோடு
இருந்துவிட்டால்....
இதையெல்லாம் இழந்திடுவேன்!
நானும் நீயும்
உறங்கி கொண்டிருந்தால்
உன் லட்சியங்களும்
உன்னோடு உறங்கிவிடும்
வெளிச்சத்தையும் கொஞ்சம்
நேசித்து பார்!
நான் இருப்பதை உணர்வாய்.
விடியல் தொடங்கியது
இமைக்காமல் அவளை பார்தேன்
ஒளியை பூசிக்கொண்டு
விழியிலிருந்து மறைந்தாள்
முதன்முதலாய்
இருளை மறைத்த
வெளிச்சத்தை நேசித்தேன்
இருளாயி தெரிந்தாள்
வெளிச்சத்தில்!
- பாலமுருகன்

Superb
ReplyDelete